திங்கள், 7 மார்ச், 2011

அன்பே சிவம்


    தமிழர்களின் வாழ்வியலோடுபின்னிப்பிணைந்திருப்பது சைவசமயமாகும். தமிழர்களின் கலை, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்என்று அவர்களின் ஒவ்வொரு நகர்விலும் சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவையாக இன்றுவரை இருந்துவருகிறது. சைவத்திலிருந்து மாறி வேறு மதங்களை தழுவி வாழுபவர்கள் மத்தியில்கூட இன்றும் சைவப்பழக்கவழக்கங்கள் மறாமல் இருக்கும் அளவிற்கு தமிழும் சைவமும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பதைக் காணலாம்.சைவம் அன்பைத்தான் முதன்மையாக போதிக்கிறது அன்பே சிவம் என்பது சைவர்களின் மூல மந்திரமாகும்.
இன்று சைவசமயத்தின்மீது அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் மத்தியிலேயே சில அதிருப்திகள் எழுந்துள்ளன. சைவசமயத்தை சேர்ந்த இன்னும் பலர் வேறுமதங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்! பல காரணங்களைக் சொல்லலாம்.அவற்றில் முக்கியமான இரண்டு விடயங்களை இப்போது பார்ப்போம்.

*விளங்காத மொழியில் வழிபாடு செய்தல்.
*பூசை செய்பவர் யாதி அடிப்படையில் தெரிவு செய்தல்.

விளங்காத மொழியில்வழிபாடு
அதிகமான தமிழர்கள் சமஸ்கிருதம் தெரியாதவர்கள், ஆனால் சைவ ஆலயங்களில் ஏன் தமிழ் மொழியில் வழிபாடுகள் நடைபெறுவதில்லை என்று பெரும்பாலான தமிழர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. மந்திரங்கள் ஓசை வடிவில் அமைந்தவை அதனாலேயே சமஸ்கிருததில் வழிபாடு நடைபெறுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தமிழிலும் அவ்வகை மந்திரங்கள் உண்டு என்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். எடுத்துக்காட்டு திருமூலர் எழுதிய திருமந்திரம்.

பூசை செய்பவரை யாதி அடிப்படையில் தெரிவு செய்தல்
உலகம் இருபத்தொராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.இன்றும் தமிழர்கள் மத்தியில் சாதிமுறை தொடர்வது பெரும்பாலான தமிழர்களுக்கு வேதனை அழிக்கின்ற ஒரு விடயமாக இருந்துவருகிறது. பூசகரை யாதி அடிப்படையில் தெரிவு செய்தல் போன்ற சில முறைமைகளை தமிழாலயங்களில் இன்னும் கடைப்பிடிப்பதே இதற்கு காரணம் என்றும் அவர்களில் பலர் நம்புகின்றனர். ஏன் இன்னும் இந்த முறை தொடர்கிறது!  இவை நம்மிடம் இடையில் வந்து தொற்றிக்கொண்டவைதான். இன்றும் கதிர்காமம் போன்ற சில ஆலயங்களில் பிராமணர் அல்லாதோர் (வேட்டுவ இனத்தைச் சேர்ந்தவர்கள்) வருடத்தில் சில தினங்கள் பூசகராக இருந்து வழிபாடு செய்து வருகின்றமை யாவரும் அறிந்தவைதான். இது பண்டைய தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றுதான்.

      சைவசமயத்தின்மீது இளையோருக்கு ஈடுபாடு ஏற்படும் வகையிலும், அதன் மீது மற்ற மதத்தவர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கும் வகையிலும் வழிபாட்டு முறைகளில் சீர்திருதங்கள் கொண்டுவரப்பட வேண்டும். குற்றச்சாட்டுகளை களைவோம். புரியாத மொழியில் வழிபாடு, பூசை செய்பவர் சாதிமுறையில் தேர்ந்தெடுத்தல் இவை இரண்டும் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய முக்கிய விடயங்களாகும். இன்று சில கோயில்களில் கவனத்தில் எடுக்கப் பட்டிருப்பத்தை அவதானிக்க முடிகிறது. ஆனால் இந்த மாற்றம் மிக வேகமாக செயற்படுத்தப்பட வேண்டும்

    இன்று உலகில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் மதங்களை எடுத்துப் பார்த்தால் காலத்திற்கு ஏற்ப நிகழ்ந்துவரும் மாற்றங்கள்தான்
இந்த வளர்ச்சிக்கு காரணமாகின்றது. சைவசமயத்தை பொறுத்தவரை புதிய மாற்றங்கள் எதுவும் தேவையில்லை.ஏற்கனவே நமது சமயத்தில் இதுவரை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கின்ற நல்ல விடயஙளை புகுத்துவதே போதுமானது. தமிழர்கள் இவற்றைக் கருத்தில்கொண்டு இனியும் காலம் தாழ்த்தாது செயற்பட வேண்டும்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

                                                                                                              பிரபா