புதன், 16 மார்ச், 2011

இலங்கையை தாக்கிய ஜப்பானியத் துருப்புக்கள்



உலக யுத்தம் இரண்டு உலகையே உலுக்கிப் போட்ட ஒரு யுத்தம். சுமார் 60 மில்லியன் மக்களின் உயிரைக் குடித்த யுத்தம் அது. அறுபது மில்லியன் எனப்படும் கணக்கு மிகப் பெரியது. அதாவது உலகத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை. அல்லது இலங்கை மக்கள் தொகையின் மூன்று மடங்கு ஆகும். உலக யுத்ததில் இலங்கையில் நடந்த சில சம்பவங்களைப் பார்க்க முன்னர், உலக யுத்தம் II இல் நடந்தது என்ன என்று பார்ப்போம்.
மேற்கில் நாடு பிடிக்கும் ஆர்வத்துடனும் முதலாம் உலக யுத்தத்தால் ஏற்பட்ட அவமானம், கடனைத் துடைக்கவும் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப் படைத்தது. சாடிக்கேற்ற மூடி போல முசோலினி தலைமையில் இத்தாலியும் தன்பாட்டிற்கு சேர்ந்து ஆடியது. போலந்தில் தொடங்கி பிரான்சு வரை பல நாடுகளைப் பிடித்து ஹிட்லர் சாதனை படைத்தான். யாராலும் அசைக்க முடியாது என்று நினைத்திருந்த பிரான்சைக் கூட தனது இராணுவ தந்திரத்தால் ஹிட்லர் வீழ்த்தினான். துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிய பிரஞ்சு அதிபர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதாராம். அப்போது ஆறுதலுக்கு பிரித்தானியா மட்டுமே இருந்தது. அமெரிக்கா இறுதிக் காலம் வரை ஏதோ தனது யுத்தம் இல்லை என்று ஓரமாக இருந்தது.
கொடியை உயர்த்தும் இரசியப் போர்வீரன்
ஓங்கியிருந்த ஹிட்லரின் கை சோவியத் படையெடுப்பில் தான் நோகத் தொடங்கியது. இரும்புத் திரையால் மூடப்பட்டிருந்த சோவியத் ருசியாவின் மீது ஹிட்லரின் பார்வை திரும்பியது. ஆனானப் பட்ட பிரஞ்சு நாடே என் காலடியில் இந்த பாட்டாளிக் கூட்டம் நிறைந்த ருசியா எமது பலம் பொருந்திய படையை என்ன செய்ய முடியும் என்று மமதையோடு ஹிட்லரின் நாசிப் படை முன்னேறியது.
ஆரம்பத்தில் வீரியமாக முன்னேறினாலும் சோவியத் படைகள் தமது உக்கிரமான மறு தாக்குதலைத் தொடங்கினார்கள். அத்துடன் தான் பின்னோக்கி நகரும் போது உணவுக் களஞ்சியங்கள், பண்ணை நிலங்கள், கால் நடைகள், உட்கட்டுமானங்கள் என்பவற்றை தாமே அழித்துக்கொண்டு பின் நகர்ந்தார்கள். இந்த நடவடிக்கையை ஒப்பரேசன் பாபரோசா என்று இன்றும் சிலாகித்து ருசியர்கள் பேசிக்கொள்வார்கள்.
முன்னேறிய நாசிப்படையின் நிலை பரிதாபமானது. உணவுத் தட்டுப்பாடு மட்டுமே என்றால் பரவாயில்லை கடுமையான குளிர்க்காலமும் இரசியாவில் ஆரம்பமானது. -50 டிகிரி வரை குளிர் இருக்கும் என்றால் பாருங்களேன். உணவு, குளிர் மட்டும் பிரைச்சனை என்றால் இல்லை. இரசியப் படை கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தத் தொடங்கியது.
நொந்து நூடில்சாகி பின்வாங்கலாம் என்று நினைத்தால் அதற்கு ஹிட்லரின் அனுமதியில்லை. செய் அல்லது செத்து மடி என்று கட்டளையிட்டுவிட்டார். ஜேர்மானியப் படைகளின் நிலைமையோ கவலைக்கிடம்.
வெடித்துச் சிதறும் அமெரிக்க கடற்படைக் கப்பல்
இதேவேளையில் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டியென்று ஜப்பான் பேர்ல் துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தித் தொலைத்தது. டிசம்பர் 7, 1941 காலை ஐப்பானிய கடற்படை விமானங்கள் பேர்ல் துறைமுகத்தின் மேலாகப் பறந்து அதிரடித் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இரண்டு அலையாக வந்த 353 ஐப்பானிய விமானங்கள் துறைமுகத்தை நொருக்கியது. இதில் 188 அமெரிக்க விமானங்கள் நொருக்கப்பட்டதுடன் சுமார் இரண்டாயிரம் அமெரிக்கத் துருப்பினர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் அமெரிக்கரை உலக யுத்தத்தில் பங்குபெறுமாறு வலியுறுத்தும் தன்மையைப் பலப்படுத்தியது. போர் கூடாது என்று முழங்கிய சராசரி அமெரிக்கனும் பழிக்குப் பழி என்று போர் கொடி தூக்கினான். டிசம்பர் 8, 1941 இல் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அமெரிக்கா ஐப்பானுக்கு எதிரான போர்பிரகடனத்தைச் செய்தார். அதைவிட இந்த நிகழ்வின் மூலம் அமெரிக்கா உலக யுத்தம் இரண்டில் உத்தியோக பூர்வமாக நுழைந்துகொண்டது. இது வரை ஆயுதங்களை விற்பனை செய்து எரியும் வீட்டில் பிடுங்கும் வேலை செய்த அமெரிக்கா இப்போது தன் வீட்டிலும் நெருப்பு பற்றிக் கொண்டதை உணர்ந்துகொண்டது.
அமெரிக்காவின் நுழைவு பிரித்தானியாவின் தலைமையினால நேச அணிகளிற்கு பலம் சேர்த்தது. ஏற்கனவே சரமாரியாக சோவியத் இராணுவத்திடம் வாங்கிக்கட்டிய ஜேர்மன் தலைமயிலான அச்சு அணிக்கு சறுக்கலாக அமைந்தது.  உலகின் மாபெரும் சக்தியாக இருந்த பிரஞ்சு பிரித்தானிய இராச்சியங்கள் தம் சோபை இழந்தது இந்த உலக யுத்தத்தினால்தான் அதைவிட அமெரிக்கா மற்றும் சோவியத் ருசியா மாபெரும் சக்திகளாக எழுச்சி கொண்டதும் இந்த உலக யுத்தத்தினால்தான்.
இரண்டாம் உலக யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாக மேலே பார்த்துவிட்டோம். இனி இலங்கையில் இதன் தாக்கம் எப்படி இருந்தது என்று பார்ப்போம். அளவிலே இந்தியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை குறுனி எனபதனால் என்னவோ இலங்கையின் பங்களிப்பு அவ்வளவாகப் பேசப்படுவதில்லை. எனது மாமனார் இலங்கையின் போர் வீரர்கள் உலக யுத்தத்தில் சாப்பாட்டு பொதி பொறுக்கும் வேலையையே செய்தார்கள் என்று சொல்லிச் சிரிப்பது இன்றும் எனக்கு ஞாபகமாக உள்ளது.
இலங்கையில் உலக யுத்தத்தின் தாக்கம் ஐப்பானியரின் கொழும்பு, திருகோணமலை குண்டு வீச்சின் பின்னர்தான் உணரப்பட்டது. இவ்வாறு குண்டுவீசக் காரணம் பிருத்தானிய கடற்படையின் கிழக்குத் தலைமையகம் இலங்கையில் அமைத்தமையே. சிங்ப்பூர் ஐப்பானியர் வசம் வீழ்துவிடவே பிரித்தானியர் இலங்கையின் கொழும்பையும் பின்னர் திருகோணமலையையும் தங்கள் கடற்படைத் தலமையகமாக மாற்றியமைத்தனர். யாராலும் இலகுவில் தகர்த்த முடியாது என நம்பப்பட்ட பிரின்ஸ் ஓப் வேல்ஸ் மற்றும் ரிபல்ஸ் ஐப்பானியர்களால் தகர்ந்து நீரில் மூழ்க வைக்கப்பட்டது. மலாயாவில் நடந்த இந்தச் சண்டையில் ஜப்பானியர்கள் கை ஓங்க அவர்கள் வசம் இருந்த விமானத் தாங்கிக் கப்பலே காரணம். இந்த தாக்குதலின் பின்னரே பிரித்தானியா வெறும் பலமான கடற்படை மட்டும் இருந்து பிரயோசனம் இல்லை விமானம் தாங்கிக் கப்பல்கள் மிக அவசியம் என்று உணர்ந்து கொண்டது. சிங்கர்பூர் வீழ்ச்சியின் பின்னர் அவசரம் அவசரமாக இலங்கையில் பல விமான ஒடுதளங்கள் அமைக்கப்பட்டன. அதைவிட இரத்மலானை, கொக்கலை போன்ற இடங்களில் விமானப் படைத்தளம் அமைக்கப்பட்டது. மேலும் முன்னரே அமைக்கப்பட்டிருந்த திருமலை, சீனன்குடா விமானப்படைத்தளமும் பலப்படுத்தப்பட்டது.
திருமலை கொழும்பு குண்டுவீச்சு நிகழ்வுகளைப் பார்க்க முன்னர் இந்த நிகழ்வின் தாக்கத்தையே மாற்றியமைத்த ஒருவரைப் பற்றி சில வரிகள் எழுதவேண்டும்.
லியனார்ட் பிர்சால் (Leonard Birchall) ஒரு கனேடிய விமான ஓட்டி. சிறுவயதில் இருந்தே இவரிற்கு பறக்கும் ஆசை. ஒந்தாரியோ மானிலத்தில் பிறந்த இவர் 1933 இல் ரோயல் கனேடிய இராணுவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். 1937 இல் தனது பயிற்சியை முடித்து கனேடிய றோயல் விமானப் படையில் விமான ஓட்டியாக இணைந்து கொண்டார்.
கண்காணிப்பு பணிக்குச் செல்ல முன்னர் லியனார்ட்
ஷெட்லான்ட் தீவுகளில் தனது பணியை ஏற்றுக் கொண்ட லியோனாட் பின்னர் ஐப்பானியர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளைக் கைப்பற்றத் தொடங்கியதும் இலங்கைக்கு மாற்றப்பட்டார். இலங்கையில் பறந்து கண்காணிப்புச் செய்யும் பணியில் இவர் ஈடுபட்டார். விரைவில் இலங்கையில் தான் பெரும் தீரச் செயலை நிகழ்த்தப் போகின்றோம் என்று அவரிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
4 ஏப்ரல் 1942 அன்று லியனார்ட் கொக்கலை பிரதேசத்தில் இருந்து பறக்கும் படகு (அதுதான் நீரில் தரையிறங்கும் விமானம்) கட்டலீனாவில் ஏறிப் பறக்கத் தொடங்கினார். சுமார் வானத்தில் எட்டு மணி நேரங்கள் சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார் லியனாட். அப்படியே இலங்கையின் தென் கடலைச் சுற்றிப் பறந்து பின்னர் தரை நோக்கித் திரும்ப விழையும் நேரத்தில் தொடுவானத்தில் விரிந்த காட்சி இவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பெரிய ஐப்பானியக் கடற்படைத் தொகுதி ஒன்று இலங்கை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. இதில் ஐந்து விமானந் தாங்கிக் கப்பல்களும் இருந்தது. பர பரப்பான லியனாட் தனது விமானத்தில் இருந்த சக வீரர்கள் மூலம் தரைக்கு தகவலை விரைந்து தெரிவித்தார்.
இவர்களின் விமானத்தைக் கண்ட ஐப்பானிய கப்பல் தமது கப்பலில் இருந்து தாக்குதல் விமானத்தை ஏவி லியனார்ட்டின் விமானத்தை நோக்கிச் சுடத்தொடங்கியது. வெறும் கண்காணிப்பு விமானம் என்பதனால் திருப்பிச் சண்டை கூடப் போட முடியாமல் சூடு பட்டு கடலில் வீழ்ந்தது லியனார்ட் பயனித்த கட்டலீனா இரக விமானம்.
லியனார்ட் அறிவித்தல் கரையை தக்க நேரத்தில் வந்து அடைந்தது. தகவல் கிடைத்ததும் பதில் தாக்குதலுக்கு ஆயத்தங்கள் செய்யப்பட்டதுடன் துறைமுகப் பகுதியில் இருந்து சரக்குகள் அவசரமாக அகறப்பட்டது. ஆனாலும் மறுநாள் ஏப்ரல் 5 அன்று ஐப்பானியர்கள் தமது விமானங்கள் மூலம் கொழும்பு துறைமுகத்தை தாக்கினார்கள். பல பிரித்தானியக் கப்பல்களை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று எண்ணி வந்த ஐப்பானியர்களுக்கு ஒரே ஏமாற்றம். நின்றதோ வெறும் மூன்று கப்பல்கள்தான். ஏனைய கப்பல்கள் ஏற்கனவே மாலைதீவில் நின்றிருந்தன. அவை தமது றேடியோ சமிக்சைகளைப் பாவிக்காததால் அவற்றின் உண்மையான இடம் ஐப்பானியக் கப்பல்களால் அறியமுடிவில்லை.
பேர்ல் ஹாபர் தாக்குதலிற்கு சமனான ஒரு தாக்குதலை நடத்த ஜப்பான் நினைத்திருந்தாலும் தாக்குதல் நடத்துமளவிற்குப் பெரியளவில் எதுவும் துறைமுகத்தில் இருக்கவில்லை. இந்த தாக்குதலை சிறப்பாக நடத்த பேர்ல் துறைமுகத் தாக்குதல் நடத்திய பல விமானிகள் அழைத்து வரப்பட்டனர் என்பதையும் குறிப்பிடவேண்டும். மேலும் பேர்ல் துறைமுகத் தாக்குதலை தலமை ஏற்ற தளபதி மிட்சோ புசிடாவே இந்தத் தாக்குதலையும் நடத்தினார். தொடர்ந்து இலங்கையில் ஒரு தரையிறக்கத்தை ஜப்பானியர்கள் நடத்த நினைத்திருந்தாலும் பிரித்தானிய மற்றும் டச்சு கடற்கலங்கள் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தின.
சுட்ட வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தின் பாகம்
காலை 7.30 க்கு ஜப்பானிய விமானங்கள் தாக்குதலைத் தொடங்கின. ஜப்பானிய சீரோ ரக விமானங்களை றோயல் விமானப்படையின் குரிகேன் இரக விமானங்கள் வழிமறித்துத் தாக்குதல் நடத்தின. தாக்குதல் காரணமாக சுமார் 424 பிரித்தானியப் படைகள் இறந்ததுடன் 1120 பேர் கடலில் பலநேரம் தத்தளித்தனர். இதைவிட மேலும் 27 விமானங்களையும் ஜப்பானியர்கள் அழித்தனர். கொலன்னாவையில் உள்ள எண்ணைக் குதம் என எண்ணி அங்கோடையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோரின் புணர்வாழ்வு மையத்தையும் ஜப்பானிய விமானங்கள் தாக்கின.
மறுநாள் இலங்கையின் டெய்லி மிரர் செய்தித்தாள் 75 விமானங்கள் கொழும்பு நகரைத் தாங்கியதாகவும் அதில் 25 விமானங்கள் சுட்டவீழ்த்தப்பட்டதாகவும் செய்திவெளியிட்டது.
ஐந்தாம் திகதி கொழும்பில் தாக்குதல் நடத்திய ஜப்பானியர்கள் சும்மா இருக்காது இப்போது இலங்கையில் கிழக்குப் பகுதியைக் குறிவைத்தார்கள். அங்கேதான் திருகோணமலை நகரம் அமைந்துள்ளது. திருகோணமலையில் முன்பே கூறியபடி பிரித்தானியாவின் கிழக்கு கட்டளை மையம் இயங்கியது. 9 ஏபரல் 1942 இல் திருகோணமலையைத் தாக்கத் தொடங்கியது ஜப்பானிய விமானப்படை. இந்த சமரில் சுமார் எட்டு ஹூரிகேன் இரக விமானங்களை றோயல் விமானப்படை இழந்தது. ஜப்பான் தனது 5 குண்டுவீசும் விமானகங்ளையும் 6 யுத்த விமானங்களையும் இழந்தது.
ஜப்பானியப் பிரசன்னம் பற்றி முதலே தகவல் கிடைத்த காரணத்தால் திருத்த வேலையில் அமர்த்தப்பட்டிருந்த எச்.எம்.எஸ்.ஹேர்ம்ஸ் எனும் கப்பல் தப்பியோட முயன்றது. ஆனாலும் அந்தக் கப்பலைக் கண்ட ஜப்பானிய விமானி ஒருவன் தகவல் கொடுக்கவே பாதுகாப்பு எதுவுமற்ற இந்தக் கப்பலைத் தாக்கி ஜப்பானிய விமானங்கள் மூழ்கடித்தன.
இதேவேளை திருமலையின் சீனக் குடாப் பகுதியில் உள்ள எண்ணைக் குதங்களை ஜப்பானியரின் தற்கொலைத் தாக்குதல் விமானம் தாக்கியது. இந்த விமானத்தில் மூன்று ஜப்பானியர்கள் பயனம்செய்தார்கள் என்பதைக் குறிப்பிடவேண்டும். இந்த தீயை அடக்க மொத்தம் ஏழு நாட்கள் ஆனதாம்.
இலங்கையை அன்று ஜப்பானியர்கள் கைப்பற்றியிருந்தால் உலக யுத்தம் மேலும் தீவிரம் அடைந்திருக்கலாம். அப்படியே ஜப்பானியர்கள் இந்தியாவினுள்ளும் புகுந்திருப்பார்கள். இலங்கையை ஜப்பான் கைப்பற்ற முயன்ற தருணத்தை பிருத்தானிய பிரதமர் “உலக யுத்தம் இரண்டில் மிகப் பயங்கரமான தருணம்” என்று குறிப்பிட்டார்.
            
         முன்னர் அரைவாசியில் விட்ட லியனார்ட்டிற்கு பின்னர் என்ன ஆனது என்று பார்ப்போம். லியனார்ட் மற்றும் ஒரு விமானப் பணியாளரை ஐப்பானியர்கள் சிறைப்படித்துக் கொண்டனர். ஐப்பானியர்கள் கையில் மாட்டினால் மரணம் நிச்சயம். கைது செய்யப்பட்ட லியனார்ட் யுத்தம் நிறைவு பெறும் வரை யுத்தக்கைதியாகவே இருந்தார். சுமார் நான்கு ஆண்டுகள் ஐப்பானியச் சிறையில் வாடினார்.
இவரின் வீரச் செயல் இலங்கையுடன் நின்றுவிடவில்லை. ஐப்பானிய போர்க்கைதியாக இருக்கும் போதும் சக போர்க் கைதிகளின் நலனிற்காகச் செயற்பட்டதுடன் ஜெனீவா ஒப்பந்தப்படி போர்க்கைதிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரினார். இவர் இந்தக் காலத்தில் எழுதிய நாட்குறிப்பு பிற்காலத்தில் நேச நாடுகள் நடத்திய பல போர்க்குற்ற விசாரணைகளில் பயன்பட்டது.
முதல் இரண்டு வருடங்களும் இவருடைய மனைவி டோர்த்தி இவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்று தெரியாமல் வாடினார். ஆயினும் பிற்காலத்தில் அவரது கணவர் உயிருடன் ஐப்பானியர்களால் பிடிக்கப்பட்டு உள்ளார் என்று அறிந்துகொண்டார்.
27 ஆகஸ்ட் 1945இல் அமெரிக்கப்படையினரால் லியனார்ட் மீட்கப்பட்டார். 1967 வரை தொடர்ந்து கனேடிய இராணுவத்தில் பணியாற்றிய லியனார்ட் 1994 இல் இலங்கையில் நடந்த தேர்தலில் சர்வதேசக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். தனது 89 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார். இவரின் மகத்தான பணியை மெச்சி பிரித்தானிய பிரதமர் இலங்கையின் இரட்சகன் (The Saviour of Ceylon) என்று பாராட்டினார்.