திங்கள், 7 மார்ச், 2011

நினனத்ததெல்லாம் நடந்துவிட்டால்


நாம் இங்கு பணத்தைமட்டும் தேடிதேடி
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம்
அம்மா அப்பா,சகோதரங்கள், சொந்தங்கள்
என்று ஒன்றாய் கூடி வாழும்வாழ்க்கை பற்றிய
கனவில் மட்டுமே இருந்துவிட்டோம்
என் தங்கையின் அண்ணன்களின் திருமணத்திற்கு
மின்னஞ்சலில் வாழ்த்துச்செய்தி அனுப்பிவைத்தேன்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா அம்மாவையும்
எனது இரண்டாவது அண்ணாவையும் கண்டு வந்தேன்
மூத்த அண்ணாவை நான் கண்டு
இருபத்திரண்டு வருடங்கள் ஓடிவிட்டது
என் தங்கை பக்கத்து நாட்டில் வசித்து வருகிறாள்
எங்கே வாழ்க்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

அப்போதெல்லாம் இங்கு நம்மவர் மிகக் குறைவு
வீதிகளில் ஒரு தமிழனைப் பார்ப்பதே அரிது
பேச்சுத் துணைக்கு யாரும் கிடைக்க மாட்டார்களா
என்று நான் ஏங்கித்திரிந்த பொழுதுகள் அவை
எனது தாய் தந்தை சகோதரங்களின்
நினைவுகள் என்னை அதிகம் பதம்பார்த்தன
ஏமாற்றங்களும், தோல்விகளும்
என்னோடு தொடர்ந்து கொண்டே இருந்தன
வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத
அந்த இளம் வயதில் நெஞ்சினில்
வலிகளை சுமந்து நான் நடந்தேன்
யாரிடமும் நான் என் துயரத்தைச் சொல்லி அழுததில்லை
நான் கோயிலுக்குச் செல்வதில்லை
*ஆனால் நான் கடவுளை அதிகம் நம்புபவன்*
எங்கும் நிறைந்தவன் இறைவன் என்பது என் கருத்து
எனக்கு கவலை அதிகமாகும்போது
அவன் என்னை கவனித்துக்கொண்டிருப்பான்
அவன்தான் நான் விரும்பியோ ,விரும்பாமலோ
எனக்கு ஒரு நிம்மதியான வாழ்வைத் தந்திருக்கிறான்
                                                                                          
                                                                                                      பிரபா