ஞாயிறு, 6 மார்ச், 2011

பாரதியின் முழக்கம்


காசியிலே பாரதியார் படித்துக்கொண்டிருந்த காலத்திலே அவருக்கு வயது பதினெட்டு. அவர் கையிலே எப்போதும் ஷெல்லியின் கவிதை நூல் இருக்கும். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கங்கையின் கரையில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பார்.
பாரதியாரின் அத்தையும் அவரது கணவரும் பாரதியை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்கள். அத்தையின் கணவரான கிருஷ்ணசிவனுக்கு பாரதி கிராப்புத் தலையாக கோட்டும் ஷீவும் போட்டுக்கொண்டு வளைய வருவதில் விருப்பமில்லை. எனவே தம்மோடு சேர்ந்து அமர்ந்து சாப்பிட பாரதியை அனுமதிக்கமாட்டார்.
கிருஷ்ணசிவன் மார்கழித் திருவாதிரை தினத்தை பெரிய உற்சவமாகவே கொண்டாடுவார். கோவிலில் அபிஷேகம், ஆராதனை எல்லாம் முடிந்தன. காராம்பசு தரிசனம், கனகசபை தரிசனம் என எல்லா தரிசனமும் முடிந்த பிறகு திருவம்பாவை பாடுவார் கோவில் ஓதுவார்.
ஆனால் அன்று ஓதுவாரைக் காணோம். எப்போது அவர் வந்து பாடு பூஜையை முடிப்பது? கிருஷ்ணசிவனும் கூடியிருந்தவர்களும் பரபரத்தனர். ஒருவருக்கும் திருவெம்பாவை தெரியவில்லை.
அத்தை பாரதியை அழைத்து கிராப்புத் தலை தெரியாதிருக்க தலைப்பாகை கட்டி, விபூதியைப் பட்டையாக இட்டு, ருத்திராட்சத்தைக் கழுத்திலே கட்டி திருவெம்பாவைப் பாடச் செய்தாள்.
பாரதியின் அழுத்தம் திருத்தமான திருவெம்பாவை இசை முழக்கமும், பாடிய முறையும் கிருஷ்ணசிவனின் உள்ளத்தை உருக்கிவிட்டது.
"அப்பா! இத்தனை சிறு வயதிலே உனக்கு எவ்வளவு ஞானம்! நாங்கள் வெறும் ஆஷாடபூதிகள். எங்களுக்கு குடுமியும் பூணூலும் வேண்டும். ஆனால் உன்னைப் போன்ற உண்மையான பக்தி உடையவர்களுக்கு எந்த வேஷமும் வேண்டாம்." என்று கூறி பாரதியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார் சிவன்.