திங்கள், 7 மார்ச், 2011

மதம்



  இறக்கும் தறுவாயில் இருந்த ஒரு மகான் சாத்தானை வணங்கிக் கொண்டிருந்தார். அவரது உறவினர்கள் அவரிடம் வந்து என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இறைவனை வணங்காமல் சாத்தானை வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு அவர் நான் இறந்த பின்னர் எங்கே போகப்போகிறேனோ தெரியாது.ஒருவேளை நான் சாத்தானிடம் செல்ல நேர்ந்தால் அவனை நான் வணங்கினேன் என்பதற்காகவேனும் என்னை அவன் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவான்.
  ஒருவேளை நீங்கள் கடவுளிடம் செல்ல நேர்ந்துவிட்டால் என்று உறவினர் கேட்டதற்கு,
  நாம் கடவுளைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர் அன்பானவர் நாம் அவர் மீது வெறுப்பைக் காட்டினாலும் எப்போதும் அவர் நம்மீது அன்பாகவே இருப்பார் என்றார் அந்த மகான்.

உண்மையில் மதங்கள் கடவுள் பற்றிக் கூறும் விளக்கங்களை கேட்கும்போதுகடவுள்மீது பக்தி ஏற்படுவதைவிட அதிகமாக பயம்தான் ஏற்படுகிறது. எந்த மதத்தவராய் இருந்தாலும் எங்கள் மதம்தான் உண்மையான கடவுளின் மதம்; மற்றவர்கள் சாத்தானின் வலையில் சிக்கியிருக்கிறார்கள்; நீங்கள் சாத்தனிடம் இருந்து விடுபட்டு விரைவில் எங்கள் சபையில் இணைந்து கொள்ளுங்கள்; இறைவன் ஆட்சியில் புதிய பரதீஸ் உருவாகப் போகிறது அங்கே நமது கடவுளின் விசுவாசிகளாய் இருப்பவர்கள் மட்டுமே வாழ்வார்கள்; மற்றவர்கள் சாத்தானோடு கொடிய நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்றெல்லாம் மதநூல்களில் போதிக்கப் பட்டிருப்பதையும்கூட சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கதைகளைக் கேட்டால் நமக்கும் கொஞ்சம் வயிற்றைக் கலக்குகிறது இல்லையா! மேற்கூறப்பட்ட குட்டிக்கதை இதைப் பற்றித்தான் விளக்குகிறது.

மதம் யானைக்குப் பிடித்தால் காடு அழியும்
அதுவே மனிதனுக்குப் பிடித்தால் நாடு அழியும்,
இதை உணராத வரையில் இந்த பூமியே நரகம்தான்!
                                                                                                   பிரபா